2571
திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்

தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்

மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்
இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்

எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்
கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2572
எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்

எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க
நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்

நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்
விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே

வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே
கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2573
பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்

புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்
வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட

விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்
வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே

மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே
காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2574
கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்

குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே

நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே
போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்

பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்
கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2575
படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாயைப்

பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்
திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்

தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்
விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட

வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே
கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே