2576
எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்

எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக

வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ
டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்

இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே
கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2577
பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே

பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்

எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்

தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ
கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2578
எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே

என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்
வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்

மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்
ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்

உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே
களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2579
சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி

தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு
புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்

போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு
வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்

மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ 
கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
2580
நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே

ஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே
மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே

மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே
ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே

ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே
கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே  
திருச்சிற்றம்பலம்
------------------------------------

--------------------------------------------------------------------------------

 போற்றித் திருப்பதிகம் (