2621
- ) 
 கட்டளைக் கலித்துறை
 
  கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே  
2622
அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே  
2623
தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே ,,, 
2624
தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே 
 
2625
எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே