2656
மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே  
2657
நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே  
2658
சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே  
2659
உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
என்னை நாடிஎ னக்கருள் செய்கவே  
2660
இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே