2666
பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே  
2667
உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே  
2668
செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே  
2669
எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே  
2670
பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே