2671
என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே  
2672
வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே  
2673
எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே  
2674
சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே  
2675
காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே