2676
சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே   
2677
வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே  
2678
அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே  
2679
புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே  
2680
கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே