2686
தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே  
2687
எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே  
2688
மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே  
2689
தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே  
2690
ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே