2706
படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே  
2707
புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே  
2708
செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே  
2709
மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே  
2710
என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே