2721
உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
கொடாதே எனைஏன்று கொள்  
2722
என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
அன்பர்க் கருள்வோய் அருள்  
2723
அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
கடையேன் படுந்துயரைக் கண்டு  
2724
பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து ()  
2725
தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
எந்தாய் எனப்புகழ வே ()