2731
ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
தாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2732
செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2733
நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்  
 வேறு 
2734
மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
பிறைமுடிச் சடைகொண் டோ ங்கும் பேரருட் குன்றே போற்றி
சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி  
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2735
செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
வினையனேன் என்செய விரைகேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
புலையனேன் புகல்அறி யேனே   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்