2736
நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே  
 வேறு 
2737
தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2738
எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே  
 வேறு 
2739
மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2740
கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே