2741
மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே  
2742
மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே  
2743
உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தௌ;ளமுதே உடையாய் வஞ்ச
நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே  
2744
கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே  
2745
இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே