2746
கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே  
 கட்டளைக் கலித்துறை 
2747
வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வௌ;விடஞ்சேர்
பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே  
2748
அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2749
பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே   
2750
பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே  
 கலித்துறை