2751
ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்  
2752
நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்  
 நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
 
2753
நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ  
 கட்டளைக் கலித்துறை 
2754
ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2755
அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ