2761
பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2762
வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே  
 கலிநிலைத் துறை 
2763
வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன்  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2764
ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே   
 வேறு 
2765
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே  
 கலி விருத்தம்