2771
சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ  
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 
2772
இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
2773
பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி  
2774
வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே  
 கட்டளைக் கலித்துறை 
2775
நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே  
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்