2821
ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே  
2822
இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே  
2823
ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே   
2824
உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே  
2825
ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
உத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே