2941
நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா  
2942
அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா  
2943
நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா  
2944
எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா  
2945
சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
தெய்வ மணியே திருவடிதான் நோவாதா