2996
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
  திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
வெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே  
2997
ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண்பாவி காண்பாவிகாண் என்பாள்
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே  
2998
உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே  
2999
திருஎலாம்அளிக்கும் தெய்வம்என் கின்றாள் திருச்சிற் றம்பலவன்என்கின்றாள்
உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே  
3000
மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே