3011
ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ

உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்

மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே

குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே

நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே   
3012
என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்

என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ

பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்

அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை

மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே   
3013
எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே

என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது

மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது

கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்

கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே   
3014
மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ

மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்

சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே

சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்

ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே   
3015
நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்

நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த

வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்

சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்

தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே