3021
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று

திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே

என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்

இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்

கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ  
3022
என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்

என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே

பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்

வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்

விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ  
3023
பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்

புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே

குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்

திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை

நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ  
3024
கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்

கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்

தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்

பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்

உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ  
3025
ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்

உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்

பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்

தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்

குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ