3031
ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்

ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே

வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே
நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி

நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்

விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே   
3032
சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்

செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்

உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்

இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்

துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே   
3033
துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே

துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே

அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே

இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்

தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே   
3034
கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே

கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே

விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே

பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்

என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே   
3035
திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்

செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்

கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்

பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே

மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே