3036
குன்றாத குணக்குன்றே கோவாத மணியே

குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே

எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே

பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்

ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே   
3037
பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே

பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே

கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்

மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்

எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே   
3038
அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி

இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி

சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு() நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி

மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே   

 வந்து - காற்று சமுக
3039
அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே

அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே

மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்

டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்

முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே   
3040
பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே

பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்

சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி

வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே

காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே