3041
என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே

என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ

தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ

நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ

என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே   
3042
பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய

பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே

நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்

நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்

குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே   
3043
சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு

தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்

கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே

மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்

பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே   
3044
சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்

தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்

என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே

கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே

பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே   
3045
ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே

இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி

மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்

தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்

உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே