3046
தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்

தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி

இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்

பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்

உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே   
3047
அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்

ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்

திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே

இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே

துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே   
3048
நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு

நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்

தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்

சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்

மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே   
3049
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்

ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்

மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்

ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்

நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே   
3050
ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே

அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்

கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்

போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை

நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே