3051
இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்

எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்

உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே

வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்

கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே  
3052
சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்

தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்

புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்

பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்

தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே   
3053
ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை

எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர

உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்

திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்

போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே   
3054
முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்

முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்

பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே

தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே

எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே   
3055
ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா

தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி

விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்

புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்

சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே