3056
அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இதுதருணங் காணே   
3057
மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்

மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே

தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே

ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே

எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே  
3058
பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்

போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க

வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்

பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே

எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே   
3059
செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து

திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே

என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்

ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இதுதருணங் காணே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 அருட்பிரகாச மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3060
உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்

உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே

இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து

களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்

ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே