3061
ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத

உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்

அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த

கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்

தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே   
3062
திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்

தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி

வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று

செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்

குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே   
3063
அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்

தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே

வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது

ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்

என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே   
3064
இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்

தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்

களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த

உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே

ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே   
3065
இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்

இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்

கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்

மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்

பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே