3066
ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்

உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து

வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது

தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்

மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே   
3067
நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து

நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்

தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்

கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்

குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே   
3068
மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்

மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று

கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே

கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே

பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே   
3069
அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்

கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே

சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்

தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே

வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே   
3070
அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்

அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த

மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ

தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்

என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே