3071
ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்

நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே

கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த

சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே

அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே   
3072
இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்

இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே

மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்

திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா

ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே  
3073
கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்

கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்

துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த

மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்

தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே   
3074
பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்

பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்

கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்

தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்

மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே   
3075
ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்

உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்

தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்

பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே

அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே