3076
அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா

அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே

கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி

உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்

பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே   
3077
காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்

கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி

உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்

யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்

பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே   
3078
துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே

சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்

பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே

உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே

பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே  
3079
நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்

நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே

அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து
வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை

வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத

கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே   
3080
சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே

தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து

தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே

மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்

சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே