3081
பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்

பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து

தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்

அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று

விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே   
3082
செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்

திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே

உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை

மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே

அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே   
3083
உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்

உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே

நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே

என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட

அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே   
3084
விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே

விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து

தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்

களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்

குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே   
3085
வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்

விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே

போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி

நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே

உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே