3086
தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்

தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்

கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த

என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே

சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே  
3087
மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்

வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்

தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்

தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்

கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே   
3088
படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று

பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்

நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்

இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே

தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே   
3089
முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த

முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்

தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ

டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட

வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே   
3090
மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்

மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்

செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்

மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே

ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே