3091
வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்

விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்

நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்

புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த

துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே   
3092
ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்

ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே

அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த

பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற

கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே   
3093
விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்

விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து

மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி

என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்

முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே   
3094
நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்

நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்

அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்

சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்

பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே   
3095
புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்

பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து

நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்

எம்ப஦ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்

தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே