3101
மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்

மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து

பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்

நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை

நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே   
3102
சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்

சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்

கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்

கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த

ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே   
3103
தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்

தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்

தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்

புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே

சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே   
3104
கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே

கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து

விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்

அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப

நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே   
3105
ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே

உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே

அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே

நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்
இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை

என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே