3106
எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி

என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே

போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே

தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்

இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே   
3107
சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்

சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்

வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்

அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்

முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே   
3108
சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே

தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்

பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே

பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த

உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே   
3109
உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்

உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து

கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து

நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
தௌ;ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்

செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே   
3110
தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்

தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்

பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே

தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை

என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே