3111
அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்

அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்

கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தொண்டனென எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்

துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே

உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே   
3112
அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்

தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து

பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்

திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்

பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே   
3113
விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்

விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து

கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
இடையின்அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே

என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்

உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே   
3114
நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்

நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி

யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்

கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்

இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே   
3115
அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்

அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே

போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்

சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே

மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே