3121
எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே

இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்

தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து

களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்

உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே   
3122
இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்

எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்

இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்

சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்

உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே   
3123
அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்

றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்

எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்

தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்

முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே   
3124
மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த

மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி

உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து

புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்

நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே   
3125
காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்

காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்

பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே

குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்

மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே