3131
ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்

அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்

திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்

களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்

தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே   
3132
அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி

ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி

யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி

மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே

சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே   
3133
நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி

நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்

தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்

தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்

மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே   
3134
யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே

உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த

என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை

வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்

முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே   
3135
மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்

மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்

மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்

தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்

அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே