3141
உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்

உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்

அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்

கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்

விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே   
3142
எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி

இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட

சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்

எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த

அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே   
3143
மானினொடு மோகினியும் மாமாயை யுடனே

வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா

றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த

திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்

மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே   
3144
பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்

பரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே
அசமான மானசிவா னந்தஅனு பவமும்

அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்

மனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று
விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்

விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே   
3145
ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி

அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்

துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே

படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்

உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே