3146
பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்

பத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில்
ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்

அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி

நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்

மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே   
3147
எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்

எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்

அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி

எழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே
சம்மதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்

தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே   
3148
பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா

போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத

வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா

நவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த
ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே

என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே   
3149
வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்

வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்

தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து

மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்

அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே   
3150
புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள்

பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்

இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
மன்றலின்அங் கெனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்தாய்

மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
பொன்றலிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்

புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே