3156
வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த

மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்

துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே

உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்

மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே   
3157
சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்

சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே

தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து

பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்

பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே   
3158
அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா

தாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்

படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே

பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்

பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே   
3159
உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்

உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த

திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை

இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்

பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பிரசாத மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3160
திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து

திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்

தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு

மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குருஉருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும்

குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே