3161
என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே

என்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்
தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்

தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்

வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்

ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே   
3162
அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே

அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு

களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்

கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி

மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே  
3163
விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து

வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்

கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்

அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட

மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே   
3164
உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி

உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப
மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை

மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்

அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்

கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே   
3165
பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த

பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக

வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்

விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
குழைஅசையச் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே

கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே