3176
உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை

ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
தௌ;ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்

கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்

இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே   
3177
பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி

பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்

என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து

கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே   
3178
பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி

பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள்
தேரணியும் நெடுவீதித் தில்லைநக ருடையாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி

இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்

தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே   
3179
தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை

தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து

வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்

உடையானே நின்னருளின் அடையாளம் இதுவே   


திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பக்தி மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3180
அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே

மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே