3181
அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே

வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே  
3182
ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாளுடையேன்() தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே

வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே  

 வாள் - ஒளி, பட்டயம் சமுக 
3183
ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே

மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே   
3184
அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்

அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே

வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே  
3185
ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்

அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே

மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்

காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே