3186
அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே

வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்

ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே   
3187
ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே

வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்

காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே  
3188
அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்

அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே

இனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்

தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே   
3189
அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்

அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே

மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்

வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 சௌந்தர மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3190
சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி

சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய்
மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்

விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்

பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த

வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே