3191
இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்

இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை
வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்

மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்

ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்

தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே   
3192
சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்

சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை

நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான

படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்

தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே   
3193
சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்

சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை

மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்

போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்

படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே   
3194
தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்

சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்

தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல்
ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த

அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்

உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே   
3195
தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்

சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்

மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்

நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
நூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான

நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே