3196
சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்

சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்

உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்

வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்

பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே   
3197
ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி

ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்

பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்

சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்

உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே   
3198
பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்

பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்

தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்

தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்

நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே   
3199
என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்

இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்

இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி

அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
என்புருக மனஞான மயமாகும் என்றால்

எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே  
3200
கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்

கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை

வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்

இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை

யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே