3211
அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப

யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்

முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே   
3212
ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்

வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்

புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3213
எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்

இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப

உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்

கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3214
என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்

இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப

மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த

புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   
3215
ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்

உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்

பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்

குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 அபராத மன்னிப்பு மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்